“மணல் கடத்தலை தடுத்ததால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்” கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
“மணல் கடத்தலை தடுத்ததால் இரும்புக்கம்பியால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்“ என கைதான 4 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இட்டமொழி,
“மணல் கடத்தலை தடுத்ததால் இரும்புக்கம்பியால் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றோம்“ என கைதான 4 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
போலீஸ் ஏட்டு அடித்துக் கொலை
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் துரை. இவர் கடந்த 6-ந் தேதி இரவில் மணல் கடத்தல் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பொதுமக்கள் இடையேயும், போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து, முக்கிய குற்றவாளியான முருகன் உள்பட 8 பேரை தேடி வந்தனர்.
ஜெயிலில் அடைப்பு
அவர்களில் தாமரைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன், கல்மாணிக்கபுரத்தை சேர்ந்த மணிக்குமார், ராஜாரவி, மணல் தரகர் சேர்மத்துரை மற்றும் 18 வயதான பாலிடெக்னிக் மாணவர் உள்பட 5 பேரை பிடித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மற்றொரு குற்றவாளியான அமிதாப்பச்சன் நேற்று முன்தினம் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, பாலிடெக்னிக் மாணவர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, நேற்று காலை நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சந்திரசேகர் விசாரணை நடத்தி, அவர்கள் 4 பேரையும் வருகிற 25-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர்களில் கிருஷ்ணன், மணிக்குமார், மாற்றுத்திறனாளியான ராஜாரவி ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாலிடெக்னிக் மாணவரை, நாங்குநேரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
முன்னதாக கைதான 4 பேரும் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பரப்பாடி அருகே உள்ள கக்கன்நகரை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு வேலைக்காக ஆற்று மணல் கேட்டார். அதற்காக நாங்கள் முருகனை தொடர்பு கொண்டோம். பின்னர் முருகன் தலைமையில் பரப்பாடி அருகே பாண்டிச்சேரி பகுதியில் உள்ள ஓடை மண்ணை டிராக்டரில் அள்ளிக் கொண்டு வந்தோம். பாண்டிச்சேரியை கடந்து வந்தபோது மோட்டார்சைக்கிளில் போலீஸ் ஏட்டு ஜெகதீஷ் துரை வந்து எங்களை மடக்கினார். எனவே அவரிடம் இருந்து நாங்கள் தப்பிப்பதற்காக வந்த வழியாக டிராக்டரை திருப்பி காட்டுப் பகுதிக்குள் சென்றோம். ஆனாலும் அவர் எங்களை விடாமல் பின்தொடர்ந்து வந்தார்.
டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்றபோது, வண்டியின் சக்கரம் பழுதடைந்து விட்டது. எனவே, டிராக்டரிடல் இருந்து தப்பி ஓட முயன்றோம். அப்போது ஏட்டு எங்களை பிடித்துக் கொண்டார். இதனால் எங்களுக்கும், அவருக்கும் வாக்குவாதம் நடந்தது. ஏற்கனவே நாங்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தோம்.
அடித்துக்கொன்றோம்
தகராறு முற்றியதால் நாங்கள் ஏட்டுவை பிடித்துக் கொள்ள முருகனும், மணிக்குமாரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் ஓங்கி அடித்தனர். இதில் ஏட்டு ஜெகதீஷ் துரை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரத்தில் அவரை அடித்துக் கொன்றோம்.
பின்னர் தடயங்களை மறைப்பதற்காக டிராக்டரில் இருந்த மண்ணை கீழே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல நினைத்தோம். ஆனாலும் டிராக்டரை இயக்க முடியவில்லை. இதனால் தப்பிச் செல்ல முயன்ற போது, தகவல் அறிந்து வந்த மற்ற போலீசாரிடம் கிருஷ்ணனும், பாலிடெக்னிக் மாணவரும் மாட்டிக் கொண்டனர். மற்றவர்கள் தப்பிச் சென்றோம். ஆனாலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகனை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story