பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா தொடங்கியது
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நேற்று தொடங்கியது.
ஓட்டப்பிடாரம்,
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நேற்று தொடங்கியது.
ஆலய திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தின் 62-வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு விழா கொடியேற்றமும் நடந்தது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.
மாலை 6 மணிக்கு கோவில் வடக்கு மேடையில் நாதஸ்வர நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. அதே போல் இரவு 7 மணிக்கு தெற்கு மேடையில் இன்னிசை கச்சேரி மற்றும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலயம் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மரியாதை
திருச்செந்தூர், கயத்தாறு, சிந்தலக்கரை, வைப்பாறு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை நினைவு ஜோதியை வீரசக்கதேவி ஆலயத்துக்கு கொண்டு வந்தனர். அந்த ஜோதிகளை ஆலய குழு தலைவர் முருகபூபதி பெற்று கொண்டார்.
முன்னதாக மாலை 6 மணிக்கு அரசு சார்பில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தலைமையில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிறப்பு பஸ்கள்
இந்த விழாவில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்றும் (சனிக்கிழமை) அதேபோல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இந்த விழாவில், கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மதுரை, ஆலய குழு செயலாளர் மல்லுசாமி, பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story