பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுரை


பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுரை
x
தினத்தந்தி 11 May 2018 11:15 PM GMT (Updated: 11 May 2018 7:14 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளையுடன் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தமிழ அரசின் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு திருப்பூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு கோடை காலத்தில் எந்த வித தங்குதடையும் இன்றி முறையில் குடிநீர் சீராக வழங்க வேண்டும்.

நீர் உள்ள இடங்களை கண்டறிந்து தேவையான இடங்களில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கும், பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் திட்டப்பணிகள், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம்(பெருந்துறை), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), காளிமுத்து (தாராபுரம்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இ.எஸ்.உமா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், மாவட்ட வன அதிகாரி முகமது சபாப், மாவட்ட வருவாய் அதிகாரி ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story