ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
கோவில்பட்டி,
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
2-வது குடிநீர் திட்ட தொடக்க விழா
கோவில்பட்டியில் நடந்த 2-வது குடிநீர் திட்ட தொடக்க விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் பேசும்போது கூறியதாவது:-
கோவில்பட்டி நகர மக்களின் 40 ஆண்டுகால கனவு நிறைவேறி உள்ளது. கோவில்பட்டி நகருக்கு 2-வது குடிநீர் திட்டத்தை மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அவர் வழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அரசு, ஜெயலலிதா தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. கோவில்பட்டி நகரில் 2-வது குடிநீர் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை விளக்கும் வகையில் இங்கு மாதிரி வடிவமும் வைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி நகர மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.
இந்த குடிநீர் திட்டத்தை வனப்பகுதி வழியாக குறிப்பிட்ட தூரம் நிறைவேற்றுவதற்கு வனத்துறையிடம் அனுமதி கேட்டு இருந்தோம். இதற்கான அனுமதியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விரைந்து வழங்கினார். மக்களுக்கான நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் வந்த இந்த அரசு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பல்வேறு நலத்திட்ட பணிகள்
இந்த அரசானது கோவில்பட்டி நகருக்கு அரசு கலை அறிவியல் கல்லூரியையும், உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளியுடன் கூடிய ஆக்கி மைதானத்தையும் தந்துள்ளது. மேலும் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 யூனியன்களில் உள்ள 248 பஞ்சாயத்துகள் பயன்பெறும் வகையில் ரூ.102 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.
உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அங்கு அனல்மின் நிலையம் தொடங்குவதற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதேபோன்று இந்த அரசானது செய்தி மற்றும் விளம்பர துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளது. பூலித்தேவர், உமறுபுலவருக்கு அரசு விழா எடுத்து உள்ளது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு உள்ளது. சிறப்பு வாய்ந்த தலைவர்களுக்கும், புலவர்களுக்கும் அரசு விழா எடுத்தும், மணிமண்டபம் அமைத்தும் உள்ளது. ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளையும் வழங்கி வருகிறது.
முதல்- அமைச்சருக்கு நன்றி
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசானது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில், 2-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தந்த முதல்-அமைச்சருக்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், சண்முகநாதன் எம்.எல்.ஏ, விஜிலா சத்யானந்த் எம்.பி., அரசின் முதன்மை செயலாளர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) லாவண்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், ஆயிர வைசிய காசுக்கார பெட்டிபிள்ளைகள் சங்க தலைவர் வெங்கடகிருஷ்ணன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சங்கர், வணிக வைசிய சங்கம் சார்பில் வெங்கடேஷ், பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் என்.சின்னத்துரை, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு கமலவாசன், நிலைய மருத்துவ அலுவலர் பூவேசுவரி, டாக்டர் ஸ்ரீவெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் வீரவாள் பரிசு வழங்கினர். முடிவில், குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முருகதாஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story