டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மையங்கள் பயனற்று கிடக்கும் அவலம்


டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மையங்கள் பயனற்று கிடக்கும் அவலம்
x
தினத்தந்தி 12 May 2018 3:30 AM IST (Updated: 12 May 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மைய கட்டிடங்கள் பயனற்று கிடப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இவற்றை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது. கிராம மக்களின் நலன் கருதி இந்த கட்டிடங்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று எண்ணத்தில் கடந்த 2013-14 ம் ஆண்டில் ஒவ்வெரு ஊராட்சியிலும், தலா ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் செலவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மொத்தம் 40 ஊராட்சிகளில் இந்த கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

கிராம மக்கள் நகரங்களில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்து சான்றிதழுக்கு அலையக் கூடாது என்பதற்காகவும், தங்களுக்கு தேவையான ஊரக வளர்ச்சி, வருவாய்துறை மூலம் பெறக்கூடிய ஒருங்கிணைந்த சான்றிதழ்களை அந்தந்த கிராம சேவை மையத்தில் பெறலாம். இந்த பயன் பயன்பாட்டிற்குத்தான், ஒவ்வெரு ஊராட்சிகளிலும் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டது. டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், வட்டார அளவிலான சேவை மையம் 27.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் கிராம சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வரவே இல்லை என்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.

இந்த சேவை மைய கட்டிடங்களுக்கு இன்னமும் மின்வசதி செய்யப்படவில்லை. இந்த மையத்திற்கு என்று பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. கணினி மற்றும் தளவாட பொருட்களும் கொண்டுவரப்படவில்லை. பெரும்பாலான கிராமங்களில் இந்த கட்டிடங்கள் ஊருக்கு வெளியே இருப்பதால் பராமரிப்பு இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. எந்த பயன்பாடும் இல்லாமல் இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெறும் கண்காட்சி பொருளாக உள்ளன.

கிராம மக்களின் உழைப்பின் மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை பார்த்து வேதனையாக உள்ளது என்று சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கிராமங்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடு உறுதியாக செயல்பட வேண்டும் என்றால், கிராம மக்கள் அலைச்சல் குறைய வேண்டுமானால் இந்த மையங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story