‘தினத்தந்தி’- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி: “மாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்”
மாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
திருச்செந்தூர்,
மாணவர்கள் தன்னம்பிக்கை- விடாமுயற்சியுடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருச்செந்தூரில், ‘தினத்தந்தி’- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்‘ நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் க.சக்திநாதன் அறிவுரை வழங்கினார்.
‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உடனே வேலை கிடைப்பதற்கு எந்த துறையை தேர்வு செய்து படிக்கலாம்? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக, ‘தினத்தந்தி’ தமிழகம் முழுவதும், ‘வெற்றி நிச்சயம்‘ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
கடந்த 16 ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்ற ‘வெற்றி நிச்சயம்‘ நிகழ்ச்சி தற்போது 17-வது ஆண்டாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.
‘தினத்தந்தி’ மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்‘ நிகழ்ச்சி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவில், கல்லூரி முதல்வர் ஞா.வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். சென்னை ‘தினத்தந்தி’யின் தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ரெ.தனஞ்செயன் கல்வி பணியில் ‘தினத்தந்தி’ என்ற தலைப்பில் பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் க.சக்திநாதன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தெந்த துறைகளில் படித்தால்...
பிளஸ்-2 முடித்த பெரும்பாலான மாணவ- மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்? என்ற சிந்தனையில் உள்ளனர். அதைவிட அவர்களுடைய பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை எந்த உயர்கல்வியில் சேர்க்கலாம்? என்ற எண்ணத்தில் உள்ளனர். இதற்காக ‘கல்வி பணியில் தினத்தந்தி’ என்ற தலைப்பில் வழங்கிய அறிவுரையை மாணவர்களைவிட பெற்றோர்கள் ஆர்வமுடன் கவனித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ‘வெற்றி நிச்சயம்’ கல்வி வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் அடங்கி உள்ளது.
அதில் எந்தெந்த துறைகளில் படித்தால், என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த வல்லுனர்களும், தங்களது துறையைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கமாக கூறுகின்றனர்.
மாணவர்கள் சுயமதிப்பீடு
பிளஸ்-2 முடித்த மாணவர்களிடம், இதை படியுங்கள், அதை படியுங்கள் என்று சிலர் ஆலோசனை கூறுவார்கள்.
யாரிடம் ஆலோசனைகள் கேட்டாலும், எந்த படிப்பை படிப்பது என்பதை மாணவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து பெற்றோரிடமும் ஆலோசனை கேட்டு கொள்ளலாம். சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு வெளிஉலக அனுபவம் குறைவு என்பதால், அவர்களுடைய உயர்படிப்பு குறித்து இவர்களே முடிவு செய்கின்றனர். சில மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு போதிய கல்வி அறிவு இல்லை என்று கருதி, தங்களுடைய உயர்படிப்பு குறித்து பிறரிடம் ஆலோசனை கேட்கின்றனர்.
யாரிடம் ஆலோசனை கேட்டாலும், மாணவ-மாணவிகள் தங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்களிடம் உள்ள திறமைகளையும், நிறைகுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் மாணவர்கள் சுயமாக முடிவு எடுக்க முடியும். மாணவர்களின் சிந்தனைகள் பல்வேறு காலகட்டங்களில் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, மாணவர்கள் தங்களது சிந்தனைகளை எழுதி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதனை சிறப்பாக செயல்படுத்த முடியும்.
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் உழைப்பு
கிராமப்புற மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். அவர், ‘தினத்தந்தி’யை தொடங்கியபோது இந்த துறையில் சாதிக்க முடியாது என்று பலர் அவரிடம் கூறினர். அவரது முடிவை அவரது குடும்பத்தினரும்கூட எதிர்த்தனர்.
ஆனால் சி.பா.ஆதித்தனார் தன்னுடைய உழைப்பின் மீதும், தன்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்று தன் மீதும் வைத்திருந்த நம்பிக்கையே ‘தினத்தந்தி’யின் வெற்றிக்கு காரணமாகும். அவரது வெற்றி, பல ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளது.
பல்வேறு போட்டிகள் நிறைந்து இருந்த காலகட்டத்திலும், கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தந்தி டி.வி.யை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு அவருடைய தன்னம்பிக்கையும், உழைப்புமே காரணமாகும்.
வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
இதேபோன்று மாணவர்களும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
பொறியியல் படிப்பை படிக்க நினைக்கும்போது, மாணவர்கள் என்றால் மெக்கானிக்கல் துறையும், மாணவிகள் என்றால் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் துறையும்தான் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. எந்த துறையை படித்தாலும், அந்த துறையில் முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெற முடியும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு எப்படி உயர்கல்வியை படித்து முடிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லை. மாணவர்கள் எந்த படிப்பை படிக்க வேண்டும், அதற்கு எந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். எப்படி பொருளாதார உதவி கிடைக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மாணவர்கள் 4 அல்லது 5 ஆண்டுகள் படிக்கும் படிப்பானது, அவர்களின் 40 ஆண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.
கல்லூரிக்கு நேரில் சென்று...
ஒவ்வொரு பெற்றோரும் நாம் கஷ்டப்பட்டாலும், நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். எனவே மாணவர்கள் உயர்கல்வி பயில தேர்வு செய்யும் கல்லூரியை நேரில் சென்று பார்த்து, அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நாம் பயிலும் துறையிலும் அங்கு என்னென்ன நவீன கட்டமைப்பு வசதிகள், உபகரண வசதிகள் உள்ளன?, அந்த துறையை படித்து முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் என்ன? என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொறியியல் பட்டப்படிப்புக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் நடைபெறும். இதற்கு போதிய காலஅவகாசம் உள்ளது. தற்போது அனைவரின் கையிலும் இணையதள வசதி கொண்ட செல்போன்கள் உள்ளன. உயர்கல்வி குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்கள் செல்போன்களிலேயே எளிதில் அறிந்து கொள்ளலாம். நமது நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் பாடங்களைக் கூட மாணவர்கள் தங்களது செல்போன்களில் பார்த்து பயன் அடையலாம். எந்த துறையை பற்றிய தகவல்களையும் செல்போன்களிலேயே அறிந்து கொள்ள முடியும்.
அர்த்தம் தெரிந்து படிக்க வேண்டும்
எந்த துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும்?, எந்த கல்லூரியில் படிக்க வேண்டும்? என்பதை மாணவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது குறிக்கோளை நிர்ணயம் செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மாணவர்கள் குறிக்கோளை நிர்ணயம் செய்து படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும். மற்றவர்களைப் பார்த்து ஏதோ ஒரு துறையை படித்தோம், வேலைக்கு சென்றோம் என்று இருக்க கூடாது.
மாணவர்கள் எந்த துறையை படித்தாலும், தெளிவாக புரிந்து படிக்க வேண்டும். அப்போதுதான் அந்த துறையில் சாதனை புரிய முடியும்.
எந்த துறையில் படித்தாலும், அந்த துறையை பற்றி முழுவதுமாக அறிந்து இருக்க வேண்டும். நாம் தினமும் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் பெரும்பாலானவர்களுக்கு அர்த்தம் தெரிந்து இருக் காது. அப்படி அர்த்தம் தெரியாமல் படிப்பதைவிட, அதன் அர்த்தத்தை தெரிந்தும், புரிந்தும் படிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்ற துறையை பற்றி தெளிவாக தெரிந்தும், உணர்ந்தும் படித்தால் வெற்றி நிச்சயம்.
கல்வி உதவித்தொகைகள்
நாம் படிக்கும்போது நமக்கு பல கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ‘தினத்தந்தி’ நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
இதேபோன்று மத்திய, மாநில அரசுகளும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள், உயர்கல்வி கடன் போன்றவற்றை வழங்குகிறது. இதனை மாணவர்கள் தெரிந்து இருந்தால்தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு எளிதாக இருக் கும். பொறியியல் கல்லூரியில் 2-ம், 3-ம் ஆண்டுகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தலைசிறந்த நிறுவனங்களில் பயிற்சி அளித்து, உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. இதனை பல மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். அவற்றை பற்றிய புரிதல், தேடுதல் இல்லாமல் மாணவர்கள் உள்ளனர்.
பொறியியல் கவுன்சிலிங்குக்கு போதிய நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே, மாணவர்கள் கல்வி உதவித்தொகை, வங்கி கடன் பெறுதல் போன்றவற்றை தற்போதே தெரிந்து கொண்டு அவற்றை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். கல்லூரியை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தும்போது கடைசி நேரத்தில் முயற்சிக்க கூடாது. மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் தயாராக உள்ளது. இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் க.சக்திநாதன் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் கோபாலகிருஷ்ணன், கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், கல்லூரி முதல்வர்கள் சுப்பிரமணியம் (ஆதித்தனார் கல்லூரி), ஜெயந்தி (கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), மரியசெசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), கலைகுருச்செல்வி (பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி), சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், நெல்லை ‘தினத்தந்தி’ மேலாளர் த.ஜனார்த்தனன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மதுரை புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார்.
Related Tags :
Next Story