கலப்பட உணவு பொருட்களை கண்டறிவது எப்படி? தஞ்சை பெரியகோவிலில் அதிகாரிகள் செயல்விளக்கம்


கலப்பட உணவு பொருட்களை கண்டறிவது எப்படி? தஞ்சை பெரியகோவிலில் அதிகாரிகள் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 12 May 2018 3:15 AM IST (Updated: 12 May 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கலப்பட உணவு பொருட்களை கண்டறிவது எப்படி? என்பது குறித்து தஞ்சை பெரியகோவிலில் அதிகாரிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

தஞ்சாவூர்,

கலப்பட உணவு பொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பே, உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்பு முகாம் தொடக்கவிழா தஞ்சை பெரியகோவிலில் நேற்று நடந்தது. இதற்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கலந்து கொண்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

அதில், ஈ மொய்க்கும் பண்டங்கள், பழங்கள், பழச்சாறுகளை வாங்க கூடாது. வெயிலில் உள்ள கேன், பாட்டில், பாக்கெட்டில் உள்ள குடிநீர் நச்சுத்தன்மையாக மாறவாய்ப்பு உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும். செயற்கையாக அதிக சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறம் கூட்டப்பட்ட பக்கோடா, பஜ்ஜி, சிக்கன்-65 போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இயற்கையான பழச்சாறு, இளநீர், மோர், நுங்கு, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

இதையடுத்து நெய், தேன், மிளகு, டீத்தூள், குளிர்பானம் மற்றும் பல்வேறு உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் அவற்றை எப்படி கண்டறியவது என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இந்த முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடை பெறும். 

Next Story