மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை, 60 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை, 60 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 4:30 AM IST (Updated: 12 May 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

காவிரி உரிமையில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி உரிமையில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தலைமை தபால் நிலையத்திற்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக தபால் நிலைய முன்பக்க கதவு மூடப்பட்டு, இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை தஞ்சை மேற்கு போலீசார் ஏற்படுத்தி இருந்தனர். பின்னர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்காமல், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதிக்கு பிறகு 3 தடவை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வேண்டுகோள் விடுத்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. காவிரி பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தலில் தங்களுக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என காவிரி பிரச்சினையை பற்றி பேசுவதற்கே பிரதமரும், மத்திய மந்திரிகளும் தயாராக இல்லை. நீதியை நிலைநாட்ட சுப்ரீம் கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கடந்த 4-ந் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்காத கர்நாடக அரசை சுப்ரீம் கோர்ட்டு எந்த கேள்வியும் கேட்கவில்லை. மத்திய அரசை கண்டிக்கவும், கட்டுப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டும் துணை போகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. பாசன பரப்பளவும் குறைந்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்ய வேண்டும் என்றால் தாமதமின்றி காவிரி பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசை வீழ்த்தும் வகையில் அடுத்தகட்ட போராட்டம் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story