கம்பன் விழா போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு ரொக்கப்பரிசு, கிரண்பெடி-நாராயணசாமி அறிவிப்பு


கம்பன் விழா போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு ரொக்கப்பரிசு, கிரண்பெடி-நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2018 4:15 AM IST (Updated: 12 May 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கம்பன் விழா போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசினை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் அறிவித்தனர்.

புதுச்சேரி,

புதுவை கம்பன் கழகம் சார்பில் 53-ம் ஆண்டு கம்பன் விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது. விழாவினை தொடங்கிவைத்து கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் ராமாயணம் படித்துள்ளேன். மிகச்சிறந்த தமிழ்காவியம் கம்பராமாயணம். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் ராமாயணம் படித்துள்ளார்கள். நானும் இந்தியில் ராமாயணம் படித்துள்ளேன்.

ராமாயணம் குறித்து மாணவர்களுக்கு வீடியோ தயாரித்து கொடுத்தால் அவர்கள் ஒழுக்கத்துடன் திகழ வாய்ப்பு கிடைக்கும்.

கம்பன் விழா போட்டியில் வெற்றிபெற்றவர்கள் 3 பேரை நான் சந்திக்க விரும்புகிறேன். அவர்களிடம் ராமாயணத்தின் தாக்கம் குறித்து பேச வேண்டும்.

கம்பன்விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கவேண்டும். அதை கவர்னர், முதல்-அமைச்சர் பெயரில் வழங்கவேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

அப்போது அவரது பேச்சை மொழி பெயர்த்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னர், முதல்-அமைச்சர் பெயரில் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக தெரிவித்தார். அதற்கு கவர்னர் கிரண்பெடியும் மேடையிலேயே முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:-

உலகத்தினர் அனைவரும் அறியவேண்டும் என்பதற்காக திருக்குறளை வ.உ.சி. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதேபோல் கம்ப ராமாயணத்தில் உள்ள 4 ஆயிரம் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

தமிழின் பெருமையை உலகத்தினர் அறிய மொழி பெயர்ப்பதாக வ.உ.சி. கூறியுள்ளார். வக்கீல்கள், நீதிபதிகள் கருப்பு அங்கி அணியும் பழக்கம் 12-ம் நூற்றாண்டில் வந்தது. ஆனால் 9-ம் நூற்றாண்டிலேயே இதுதொடர்பாக கம்பன் குறிப்பிட்டுள்ளான்.

இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.

இலங்கை ராஜாங்க கல்வி மந்திரி வீ.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

உலகில் உள்ள மொழிகளில் தமிழுக்கு சிறப்பு உண்டு. அதில் திருக்குறளை உலகிற்கு தந்த திருவள்ளுவருக்கு பெரும் பங்கு உண்டு. இலங்கையை மறந்து ராமாயணம் இருக்க முடியாது.

சீதையை ராமன் சிறைவைத்த இடம் அசோக வனம். அந்த பகுதியில் இருந்துதான் நான் வந்துள்ளேன். இப்போது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் ஒரு பாலம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ராமர்பாலம் என்பது இப்போது பேசப்படும் பொருளாக உள்ளது. அந்த பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டுள்ளது. அதை நாசா கண்டுபிடித்துள்ளது. எனவே ராமாயணமும் உண்மைதான்.

அதேபோல் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ராமர் பாலம் போன்று உறவுப்பாலம் உருவாக ஆசைப்படுகிறோம்.

இவ்வாறு இலங்கை ராஜாங்க கல்வி மந்திரி வீ.எஸ். ராதாகிருஷ்ணன் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அன்பழகன் எம்.எல்.ஏ., கம்பன் கழக தலைவர் கோவிந்தசாமி முதலியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளும், புத்தக வெளியீடும் நடந்தது. பின்னர் செம்மை சேர் தன்னை என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் தனியுரை ஆற்றினார். மாலையில் தமிழ்நெறி வழக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர் பேசினார். மாலையில் திரிபுர சுந்தரி சுப்ரமணியன் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனர் செல்வகணபதி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. 

Next Story