உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: கவர்னரிடம், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.மனு


உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: கவர்னரிடம், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.மனு
x
தினத்தந்தி 12 May 2018 4:45 AM IST (Updated: 12 May 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உள்ளாட்சித்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென கவர்னரிடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு சேர்மன், கவுன்சிலர் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் என்று 1,134 பேர் பல்வேறு பதவிகளை வகித்தனர். இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் பொம்மை களாக வைக்கப்பட்டனர். அவர்களுக்கு போதுமான நிதியோ, அதிகாரமோ அரசால் அளிக்கப்படவில்லை. அதையடுத்து பஞ்சாயத்துகள் அமைச்சகத்திற்கும், புதுச்சேரி அரசுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி நிதி அறிக்கையில் ஆண்டுதோறும் பஞ்சாயத்துக்கு தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் அதையும் புதுச்சேரி அரசு கடைப்பிடிக்கவில்லை. 2011-ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சித்தேர்தலை நடத்த புதுவை அரசு முன்வரவில்லை.

இந்தநிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளாட்சித்தேர்தலை நடத்த முடியாது என்று புதுவை அரசு, நீதிமன்றத்திற்கு பதிலளித்து தேர்தலை தள்ளிப்போட முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். எனவே உள்ளாட்சித்தேர்தலை உடனடியாக நடத்த தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story