புதுச்சேரி அருகே நடுக்கடலில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பார்சல்


புதுச்சேரி அருகே நடுக்கடலில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா பார்சல்
x
தினத்தந்தி 12 May 2018 3:30 AM IST (Updated: 12 May 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே நடுக்கடலில் மிதந்த 50 கிலோ கஞ்சா பார்சலை மீனவர்கள் மீட்டு கோட்டக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வானூர்,

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நடுக்குப்பம் மீனவர்கள் ஜீவா (வயது 55), அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28), சுகன் (23) ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் காலை 10-30 மணி அளவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பாலித்தீன் கவரால் தண்ணீர் புகாத அளவுக்கு சுற்றப்பட்ட ஒரு சாக்கு மூட்டை கடலில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தனர். உடனே அவர்களுக்கு அந்த சாக்கு மூட்டையில் என்ன இருக்கும் என கண்டறிய ஆவல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்கள் மீன்பிடி வலையை இழுக்க பயன்படுத்தும் கொக்கியை பயன்படுத்தி அந்த சாக்குமூட்டையை இழுத்து படகில் ஏற்றினர். அவர்கள் இழுத்த வேகத்தில் அந்த சாக்குமூட்டை லேசாக கிழிந்து சேதமடைந்தது. அந்த மூட்டையை அவர்கள் பிரித்து பார்த்தபோது, அதில் சிறியதாக 10 அட்டை பெட்டிகள் இருந்தன.

அவற்றில் ஒரு அட்டைப்பெட்டியை மீனவர்கள் பிரித்து பார்த்தனர். அதில் இருந்த தூள்போன்ற பொருளை அவர்கள் எடுத்து முகர்ந்து பார்த்தனர். அதன் வாசனையால் அவர்களுக்கு லேசான மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதனால் அது ஏதோ போதை பொருள் என சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.

அதையடுத்து அவர்கள் அந்த சாக்கு மூட்டையுடன் கரைக்கு திரும்பி வந்தனர். பின்னர் அவற்றை நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்தார் வசம் ஒப்படைத்து அது கடலில் மிதந்து வந்த விவரத்தை தெரிவித்தனர். பின்னர் அந்த சாக்கு மூட்டையை கோட்டக்குப்பம் போலீசாரிடம் மீனவ பஞ்சாயத்தார் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த சாக்குமூட்டையை ஆய்வு செய்தபோது அதில் உள்ள அட்டைப் பெட்டிகளில் இருந்தது அனைத்தும் கஞ்சா துகள்கள் என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கோட்டக்குப்பம் போலீசார், புதுச்சேரி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கஞ்சா பொட்டலங்கள் கடலில் மிதந்து வந்த தகவலை தெரிவித்தனர். உடனே சுங்கத்துறையினர் விரைந்து வந்து அந்த அட்டை பெட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் தலா 5 கிலோ வீதம் 10 அட்டை பெட்டிகளில் மொத்தம் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

நடுக்கடலில் கஞ்சா பொட்டலம் பார்சல் மிதந்து வந்தது எப்படி? போதை பொருள் கடத்தல் கும்பலால் கடத்தி வரப்பட்டதில் தவறி கடலில் விழுந்ததா? அல்லது கடலோரக் காவல் போலீசாருக்கு பயந்து போதை பொருள் கடத்தல் கும்பல் அந்த கஞ்சா பார்சலை கடலில் வீசி எறிந்துவிட்டு தப்பியதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது

Next Story