8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலத்தில் இருந்து சென்னைக்கு புதிதாக அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சிவபெருமாள், மாவட்ட செயலாளர் பெரியண்ணன் உள்பட ஏராளமான விவசாயிகளும், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும், கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும், விவசாய நிலத்தை அழிக்கக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமை சாலை திட்டத்தால் வீடுகளை இழக்க நேரிடும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு புதிதாக 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். யாருக்காக இந்த பசுமை சாலை? இந்த சாலையால் எந்த பலனும் இல்லை. தென்னை மரங்கள், கனிவகை மரங்கள், விவசாய பயிர்கள் போன்றவை முற்றிலும் அழிக்கப்படும். இதை நம்பி இருக்கிற விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்தினாலே போதும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன்கருதி சேலம்–சென்னை இடையே அமைய உள்ள பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும். உணவு உற்பத்தியை பெருக்க நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஆனால் உணவு உற்பத்தியை அடியோடு அழிக்கும் பசுமை சாலை திட்டத்தை கொண்டுவந்தால் எப்படி?. எனவே பசுமை வழி சாலை திட்டத்தை கைவிடக்கோரி அனைத்து விவசாயிகளையும் திரட்டி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.