தென்காசியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறுத்தம் நகரசபை அதிகாரிகள் விசாரணை


தென்காசியில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நிறுத்தம்  நகரசபை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 11 May 2018 9:15 PM GMT (Updated: 11 May 2018 8:53 PM GMT)

தென்காசியில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தென்காசி, 

தென்காசியில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக நகரசபை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேவர் பிளாக் கற்கள் 

நெல்லை மாவட்டம் தென்காசி மாதாங்கோவில் 1–ம் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது. இந்த பணிகளுக்காக பேவர் பிளாக் கற்கள் மற்றும் மணல் உள்ளிட்டவை அந்த பகுதியில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் பணியாளர்கள் கற்களை சாலையில் அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு 

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டனர். அப்போது பணியாளர்கள் தரையை தோண்டாமல் பேவர் பிளாக் கற்களை அப்படியே பதித்தனர். உடனே இதுகுறித்து பொதுமக்கள் பணியாளர்களிடம் விவரம் கேட்டனர். அப்போது அங்கு வந்த ஒப்பந்ததாரருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகள் விசாரணை 

இதை தொடர்ந்து பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து நகரசபை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story