நியாயவிலை கடைகளுக்கு முழு சுகாதார வசதியுடன் கூடிய கட்டிடம் வேண்டும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்


நியாயவிலை கடைகளுக்கு முழு சுகாதார வசதியுடன் கூடிய கட்டிடம் வேண்டும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 May 2018 2:25 AM IST (Updated: 12 May 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

நியாயவிலை கடைகளுக்கு முழு சுகாதார வசதியுடன் கூடிய கட்டிடம் வேண்டும் என தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை, 

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மண்டல மாநாடு நேற்று புதுக்கோட்டையில் நடை பெற்றது. இதற்கு தொ.மு.ச. மாநில துணை பொது செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட பொருளாளர் மணி, சிதம்பரம், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொ.மு.ச. பேரவை செயலாளர் பொன்னுராம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மாநாட்டில் பொது வினியோக திட்டத்தை ஒருங்கிணைத்து தனி துறையாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும்

480 நாட்களுக்கு மேல் பணிவரை முறை செய்யாமல் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்களை உடனடியாக பணிவரன் முறைப்படுத்த வேண்டும். பொது வினியோக திட்ட பொருட்களை பொட்டலங்களில் (பாக்கெட்டில்) இட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வினியோக திட்ட நியாய விலைக்கடைகளுக்கு முழு சுகாதார வசதியுடன் கூடிய கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு. செல்வராசு உள்பட புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தொ.மு.ச. மாவட்ட தலைவர் மதி வரவேற்றார். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.

தொடர்ந்து தொ.மு.ச. பேரவை செயலாளர் பொன்னுராம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த மண்டல மாநாட்டில் வேலைநிறுத்த போராட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது என்றார். 

Next Story