சின்னமுட்டத்தில் கோஷ்டி மோதல்: 4 பெண்கள் உள்பட 10 பேர் கைது


சின்னமுட்டத்தில் கோஷ்டி மோதல்: 4 பெண்கள் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 2:47 AM IST (Updated: 12 May 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில், ஒரு கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக இருதரப்பு மீனவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவுஅந்த பகுதியை சேர்ந்த இருதரப்பு மீனவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். வீடுகள் மீதும் கற்கள் வீசப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட 2 கோஷ்டியினரையும் தடுத்தனர்.

இந்த மோதலில் 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போலீசில் புகார்

இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சின்னமுட்டம் சர்ச் தெருவை சேர்ந்த கஸ்பின் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சவுந்தர்ராஜன், வர்கீஸ், ஜார்ஜ், சேகர் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், ஜேசுபுத்திரன் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழ், சில்வெஸ்டர், லாரன்ஸ், காட்வின், உட்பின் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது

மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக சேகர், கனிஸ்கர், சிலுவை, ஜோன்ஸ் அயன் சிங், லியோன் என்ற பட்டு, ராஜன் ஆகிய 6 பேரையும், 4 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

சின்னமுட்டத்தில் நேற்று 2-வது நாளாக பதற்றம் நீடித்ததால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 

Next Story