கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 19-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை போன்றவை நடந்தது.
தொடர்ந்து மலர்கள் மற்றும் மா இலை தோரணங்களால் திருக்கால் அலங்கரிக்கப்பட்டு கிழக்கு வாசலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் வடக்கு வாசலில் உள்ள நுழைவு பகுதியில் கால்நாட்டப்பட்டது.
குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மேல்சாந்தி மணிகண்டன் ஆகியோர் கால் நாட்டினர். தொடர்ந்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
வைகாசி விசாக திருவிழா நாட்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது. மாலையில் பக்தி சொற்பொழிவு, வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
27-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி இரவு 9.30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும்.
Related Tags :
Next Story