அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 12 May 2018 3:00 AM IST (Updated: 12 May 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை, 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆதனூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் நீர் நிலை பகுதிகளில் வீடு கட்டி வசித்து வந்த பொதுமக்கள் கோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்றப்பட்டனர். அவர்கள் தற்போது ஒரகடத்தை அடுத்த செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள நாவலூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

மறியல்

இந்தநிலையில் நேற்று காலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் மணி (வயது 50) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் ½ மணி நேரத்திற்கு பின்னர் வந்ததால் மணியை காப்பற்ற முடியவில்லை. மணி இறந்து விட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன், வருவாய் ஆய்வாளர் அரிஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து நெரிசல்

அப்போது பொதுமக்கள் தாசில்தாரிடம் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளான மருத்துவ வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, நிரந்தரமாக ஆம்புலன்ஸ் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் தெருவிளக்குகள் அமைத்து தரவும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்ட தாசில்தார் ரமேஷ் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story