ஆர்ப்பாட்டம் நடத்த தடை: நெல்லை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முற்றுகை


ஆர்ப்பாட்டம் நடத்த தடை: நெல்லை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 12 May 2018 3:03 AM IST (Updated: 12 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை பல்வேறு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

நெல்லை, 

நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை பல்வேறு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

முற்றுகை 

பாளையங்கோட்டையில் நேற்று பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, தடை விதித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து விட்டு நிர்வாகிகள் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பழனி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கனி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆரிப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், கிறிஸ்தவ கூட்டமைப்பு ஜெபசிங் உள்ளிட்டோர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வேண்டும் 

தற்போது நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி உரிமை பறிப்பு, மணல் கொள்ளை, கொலைகள் என பல்வேறு பிரச்சினைகளை நாளும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி ஆளும் அரசின் கவனத்துக்கு அவற்றை கொண்டு செல்வது பொது மக்களின் மீது அக்கறை கொண்ட கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கடமை ஆகும். இதற்காக மக்கள் மத்தியில் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள உரிமை ஆகும்.

ஆனால் இவ்வாறு நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், கூட்டங்களை நெல்லை மாநகர பகுதியில் இதுவரை நடத்தி வந்த இடங்களில் தற்போது நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது நியாயமானது அல்ல.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும். கோரிக்கையை விளக்கி பேசக்கூடாது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பொது மக்கள் பங்கேற்க வேண்டும். ஒலி பெருக்கி பயன்படுத்த கூடாது என்று புதிய கட்டுப்பாடுகள். விதிகளை தற்போது கூறுகின்றனர். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான செயலாகும். அவற்றை பறிக்கும் செயல் ஆகும். எனவே இந்த கட்டுப்பாடுகள், கெடுபிடிகளை போலீசார் உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story