திண்டுக்கல்லில் பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு: வாலிபர் சிக்கினார்
திண்டுக்கல்லில், மொபட்டில் சென்ற பல்கலைக் கழக பெண் ஊழியரிடம் 5½ பவுன் நகையை பறித்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கவிதா (வயது 36). இவர் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலை கவிதா தனது மொபட்டில் ஆர்.எம்.காலனி 9-வது கிராஸ் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுதொடர்பாக, கவிதா திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ரவுண்டானாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் முகத்தை கைக்குட்டையால் மறைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவருடைய மோட்டார்சைக்கிள் அடையாளங்களை வைத்து அவர் திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மர்மநபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தாடிக்கொம்புவை சேர்ந்த முருகையா மகன் பூவரசன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5½ பவுன் நகையை மீட்டனர்.
விடுதியில் போலீசார் சோதனை செய்த போது அங்கு சுமார் 30 வாலிபர்கள் தங்கி இருந்தனர். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிள்களில் வந்து அங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த சிலரும், திண்டுக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்களும் உள்ளனர். அதில் சிலர் சென்னையில் ஐ.ஐ.டி.யில் படிப்பதாக கூறியுள்ளனர். அவர்கள் சிறுமலைக்கு சுற்றுலா செல்ல நண்பர்களுடன் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு தங்கி உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னர் தான் தங்கும் விடுதியில் தங்கி உள்ளவர்கள் குறித்த முழுவிவரமும் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story