கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது
கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தேர்தல் ஆணையம் அறிவித்தபடி 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது.
இன்று ஓட்டுப்பதிவு
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 27-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. களத்தில் 2,636 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் ஆண் வேட் பாளர்கள் 2,417 பேரும், பெண் வேட்பாளர்கள் 219 பேரும் உள்ளனர். இதில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைசி நேரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) தொகுதிக்கான தேர்தல் வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த 2 தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடக்கிறது. இதில், ஆளும் காங்கிரஸ் சார்பில் 220 தொகுதிகளிலும், பா.ஜனதா சார்பில் 222 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 217 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ஆகமொத்தம் சுயேச்சை மற்றும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து 2,622 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையில் ஓய்ந்தது.
தேர்தலை நடத்தும் அலுவலர்கள் நேற்றே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். சாதாரண வாக்குச்சாவடிகளுக்கு சராசரியாக 6 ஊழியர்கள் மற்றும் 2 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 6 ஊழியர்கள், 2 போலீசார் மற்றும் மத்திய போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
56,104 வாக்குச்சாவடிகள்
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சுட்டெரித்து வரும் கோடை வெயிலையொட்டி ஓட்டுப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜெயநகர் மற்றும் ஆர்.ஆர்.நகர் தொகுதிகளை தவிர்த்து இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்து 104 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 12 ஆயிரத்து 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,219 வாக்குச்சாவடிகள் உள்ளன.
1½ லட்சம் போலீசார்
மேலும் 600 மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி கட்டிடம் ‘பிங்க்‘ நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளை பெண் அலுவலர்கள் மட்டும் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ‘பிங்க்‘ நிற சீருடை அணிந்து பணியாற்ற உள்ளனர். அதாவது, பெண்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முதன் முறையாக கர்நாடகத்தில் இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
தேர்தல் நடக்கும் 222 தொகுதிகளில் சுமார் 5 கோடி பேர் வாக்காளிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 கோடியே 47 லட்சம் பெண்களும், மூன்றாம்பாலினத்தினர் 4,990 பேரும் அடங்குவர். இதில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் உள்ள சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பெங்களூருவை பொறுத்தவரையில் 26 தொகுதிகளில் 7,857 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
சுமார் 1½ லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் 50 ஆயிரம் பேர் மத்திய போலீஸ் படையை சேர்ந்தவர்கள். இது மட்டுமின்றி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணிக்காக கர்நாடகத்திற்கு வந்துள்ளனர்.
தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்கும் வண்ணம் ஓட்டுப்பதிவை ‘வெப் கேமரா‘ மூலம் படம் பிடிக்கவும், அதை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
15-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
தேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு தொடர்பாக மூன்று கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டால் உடனே அதை மாற்றிவிட்டு, வேறு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வசதியாக கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய அளவில் உண்டாகும் தொழில்நுட்ப கோளாறுகளை நீக்க தேவையான பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது. அதன் பின்னர் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூட்டி ‘சீல்‘ வைக்கப்படும். அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. ஊடகங்களில் விளம்பரம், தெரு நாடகம், கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
போராட்டம் நடத்தினர்
பெங்களூரு, உப்பள்ளி, விஜயாப்புரா உள்பட பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊழியர்களுக்கு வழங்கி அவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. உப்பள்ளி மையத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதே போல் பல்வேறு மையங்களிலும் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்கள், தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினர். பெங்களூருவில் பி.எம்.டி.சி.யை சேர்ந்த ஏராளமான பஸ்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதால், நகர சாலைகளில் பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் வாகன நெரிசல் குறைந்து காணப்பட்டது.
தொங்கு சட்டசபை?
கர்நாடக தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும் பெரும்பாலான ஊடக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு வருகிற 28-ந் தேதி நடைபெறும் என்றும், 31-ந் தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story