கோடை விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி


கோடை விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி
x
தினத்தந்தி 11 May 2018 10:30 PM GMT (Updated: 11 May 2018 10:03 PM GMT)

கொடைக்கானலில், கோடைவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது.

கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி’ என வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளு, குளு சீசன் நிலவும். இதை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் சீசனையொட்டி கோடைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கோடைவிழா கமிட்டியின் சார்பாக, முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முன்னோட்ட நிகழ்ச்சிகள் மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியுடன் நேற்று தொடங்கியது. இதில் ‘எனது பார்வையில் கொடைக்கானல்’ என்ற தலைப்பில் பிரையண்ட் பூங்காவில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுலா வந்திருந்த மாணவ-மாணவிகள், கொடைக்கானலை சேர்ந்த மாணவ-மாணவிகள் என நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கொடைக் கானலை சேர்ந்த ஹர்சினி முதல் இடத்தையும், திண்டுக்கல்லை சேர்ந்த யாசிகா 2-ம் இடத்தையும் சென்னையை சேர்ந்த விஷ்ணுபிரியா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி தலைமை தாங்கினார். தாசில்தார் பாஸ்யம் அனைவரையும் வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆர்.டி.ஓ. மோகன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.


Next Story