சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு பேட்டி


சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு பேட்டி
x
தினத்தந்தி 11 May 2018 11:00 PM GMT (Updated: 11 May 2018 10:05 PM GMT)

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

12 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள்

கர்நாடக சட்டசபைக்கு நாளை (அதாவது இன்று) தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், கர்நாடக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்பதே மாநில போலீசாரின் நோக்கம் மற்றும் விருப்பம் ஆகும். இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சட்டம்-ஒழுங்கு, பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து தினமும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்து 480 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 12 ஆயிரத்து 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 46 ஆயிரத்து 302 வாக்குச்சாவடிகள் சாதாரணமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒரு ஏட்டு உள்பட 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

1½ லட்சம் போலீசார்

தேர்தல் பாதுகாப்பு பணியில் 278 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 947 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1,819 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5,322 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 45,685 போலீஸ்காரர்கள், 27,672 ஊர்க்காவல் படையினர், 434 வனத்துறையை சேர்ந்த காவலர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஸ்கர், கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 4,150 போலீஸ்காரர்கள், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் முதல் முறையாக லோக் ஆயுக்தா மற்றும் சிவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் இருந்து 385 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் ஏற்கனவே கர்நாடகத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் துணை ராணுவ படை, அதிவிரைவு பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

49,565 பேர் கைது

பெங்களூரு, பெலகாவி, மங்களூரு, பெலகாவி புறநகர் உள்பட 10 மாவட்டங்களில் தலா ஒரு கம்பெனி அதிவிரைவு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டங்கள் பதற்றமானவை என்பதால், அங்கு மட்டும் அதிவிரைவு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகள் தவிர, அந்த பகுதியை சுற்றி இன்ஸ்பெக்டர் அல்லது சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் ரோந்து செல்வார்கள். இதற்காக மட்டும் 900 குழுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 95,405 உரிமம் உள்ள துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 22 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. முன் எச்சரிக்கையாக இதுவரை 49,565 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்த சம்பவங்கள் தொடர்பாக 117 வழக்குகள் பதிவாகி உள்ளன. சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கியதாக 2,122 வழக்குகள் பதிவாகி உள்ளன.

நக்சலைட்டுகள் மிரட்டவில்லை

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக பணம், தங்க நகைகள், வெள்ளி, பிற பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக அவற்றின் மதிப்பு ரூ.166 கோடியே 45 லட்சம் ஆகும். தேர்தலை நடத்த விடமாட்டோம், புறக்கணிப்போம் என்பது போன்ற எந்த விதமான மிரட்டல்களும் நக்சலைட்டுகளிடம் இருந்து வரவில்லை. தமிழ்நாடு, கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு நக்சலைட்டுகள் வரவில்லை என்றும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் நக்சலைட்டுகள் பாதித்த பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலையொட்டி மாநிலத்தில் பெரிய அளவில் வன்முறைகளோ, அசம்பாவிதங்களோ, மதக்கலவரங்களோ, சாதி கலவரங்களோ ஏற்படவில்லை. சிறு, சிறு சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. இதனால் இந்திய தேர்தல் ஆணையமே மாநிலத்தில் சிறப்பான பாதுகாப்புகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாநில மக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு டி.ஜி.பி. நீலமணி ராஜு கூறினார்.

பேட்டியின் போது கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த் உடன் இருந்தார்.

Next Story