10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் திடீர் ஒத்திவைப்பு


10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் திடீர் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 12 May 2018 4:00 AM IST (Updated: 12 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டைகள்

கர்நாடக சட்டசபைக்கு இன்று(சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு உட்பட்ட ஜாலஹள்ளியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள வீட்டில், தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா எம்.எல்.ஏ. மீது ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் அறிவித்தார். இதுபற்றி அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குக்கர்கள்

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு உட்பட்ட ஜாலஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 7-ந் தேதி இரவு நடத்தப்பட்ட சோதனையில் 9,564 வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் வாக்காளர் சீட்டுகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்த அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் அச்சிடும் எந்திரம், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உண்மையானதா? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அவை அனைத்தும் உண்மையான வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காங்கிரஸ் வேட்பாளர், அந்த வாக்காளர்களுக்கு தண்ணீர் கேன்களை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தேர்தலுக்கு பிறகு குக்கர்கள் கொடுப்பதாக உறுதி அளித்ததாகவும் அந்த வாக்காளர்கள் கூறினர். அந்த தண்ணீர் கேன்கள் மீது காங்கிரஸ் வேட்பாளரின் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணை அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினோம்.

வாக்காளர்களுக்கு பரிசுகளை...

மேலும் கடந்த 6-ந் தேதி அதே தொகுதியில் ஒரு லாரியில் ரூ.95 லட்சம் மதிப்புள்ள சுமார் 5,018 டி-சர்ட்டுகள், 23 ஆயிரத்து 393 ‘பர்முடா‘க்கள்(முக்கால் அளவு பேண்ட்) பறிமுதல் செய்யப்பட்டன. அந்த டி-சர்ட்களிலும் காங்கிரஸ் வேட்பாளர் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. இதுபற்றி அந்த வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இந்த விஷயங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம். காங்கிரஸ் வேட்பாளர், ஓட்டுகளை பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பரிசுகளை கொடுக்க திட்டமிட்டு இருந்தது தெரிகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது குற்றம் ஆகும். அதன் அடிப்படையில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. அந்த தொகுதியில் வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறும். அதன் வாக்கு எண்ணிக்கை 31-ந் தேதி நடைபெறும். அந்த தொகுதியில் மிகுந்த கண்காணிப்புடன் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும்.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

222 தொகுதிகளில் தேர்தல்

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு ஏற்கனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் முறைகேடுகள் அடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று(சனிக்கிழமை) 222 தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதில் ஆளும் காங்கிரஸ் 220 தொகுதியிலும், பா.ஜனதா 222 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 217 தொகுதியிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story