தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; தடுப்பணை-வனக்குட்டைகள் நிரம்பின


தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; தடுப்பணை-வனக்குட்டைகள் நிரம்பின
x
தினத்தந்தி 11 May 2018 10:30 PM GMT (Updated: 11 May 2018 10:13 PM GMT)

தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் தடுப்பணைகள் மற்றும் வனக்குட்டைகள் நிரம்பின. சூறாவளிக்காற்றால் ரோட்டில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதைத்தொடர்ந்து 2.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 3.30 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் தாளவாடி, தொட்டகாஜனூர், சூசைபுரம், மல்லன்குழி, பாரதிபுரம், மெட்டல்வாடி, கும்டாபுரம், தொட்டாபுரம், சிக்கள்ளி, மரூர், நெய்தாளபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. அதுமட்டுமின்றி தாளவாடி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது.

மேலும் தாளவாடி அருகே உள்ள சேஷன் நகரை சேர்ந்த விவசாயி ரவி என்பவரின் தோட்டதில் இருந்த தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் அந்த மரம் முழுவதும் எரிந்து நாசம் ஆனது.

சூறாவளிக்காற்று வீசியதில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் ரோட்டில் தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு மரம் முறிந்து விழுந் தது. இதேபோல் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புளிஞ்சூர் சோதனை சாவடி அருகே பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த 2 ரோடுகளிலும் ஒரு மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாளவாடி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், 15-க்கும் மேற்பட்ட வனக்குட்டைகள் நிரம்பின.

கோடை மழை காரணமாக தாளவாடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story