ஈரோட்டில் நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
ஈரோட்டில், நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு,
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கூடங்கள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் அதிக அளவில் தேவைப்படும் என்பதால் நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணி ஈரோட்டில் காரைவாய்க்கால், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நோட்டு புத்தகம் தயாரிக்கும் கூலி தொழிலாளியான முனாப் என்பவர் கூறியதாவது:-
அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு அரசு விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கி விடுகிறது. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிவகாசி, மதுரை போன்ற பெருநகரங்களில் மொத்தமாக ஆர்டர் கொடுத்து நோட்டு புத்தங்களை வாங்கிக்கொள்கிறார்கள்.
இதுபோக கூடுதலாக தேவைப்படும் நோட்டு புத்தகங்களை மாணவ -மாணவிகள் நேரடியாக புத்தக கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்கிறார்கள். அதற்காக சில்லரை விற்பனை புத்தக கடைக்காரர்கள் தங்கள் நிறுவனத்தின் பெயருடன் நோட்டுகளை தயாரித்து கொடுக்க தேவையான அளவுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்துள்ளனர். கூலி ஒப்பந்த அடிப்படையில் நோட்டு தயாரிக்க தேவையான பேப்பர், அட்டை, முன்பக்க வண்ண காகிதம் ஆகியவற்றை புகத்தக கடைக்காரர்களே கொடுத்து விடுவார்கள். அதை நாங்கள் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நோட்டு புத்தகம் தயாரித்து வழங்குகிறோம்.
96 பக்கங்கள் கொண்ட நோட்டு புத்தகம் என்றால் அதற்கு கூலியாக ரூ.8-ம், 192 பக்க நோட்டு புத்தகம் என்றால் அதற்கு கூலியாக ரூ.10-ம் பெற்றுக்கொள்வோம். எங்களுக்கு மொத்தமாக ஆர்டர் கிடைக்காததால் நாங்கள் கூலிக்கு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஈரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நோட்டு புத்தகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் தற்போது 50 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story