ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக கர்நாடகத்தில் ரூ.3¼ கோடி பறிமுதல் கடைசி நாளில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை


ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக கர்நாடகத்தில் ரூ.3¼ கோடி பறிமுதல் கடைசி நாளில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2018 10:23 PM GMT (Updated: 11 May 2018 10:23 PM GMT)

ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக கர்நாடகத்தில் ரூ.3¼ கோடி ரொக்கத்தை கடைசி நாளில் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு, 

ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக கர்நாடகத்தில் ரூ.3¼ கோடி ரொக்கத்தை கடைசி நாளில் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ரூ.2.17 கோடி ரொக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநில தேர்தல் பறக்கும் படையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். கொப்பல், தார்வார், கோலார், பெங்களூரு, உடுப்பி, சித்ரதுர்கா உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

சித்ரதுர்காவில் இருந்து முலகால்மூருக்கு சென்ற காரை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2.17 கோடி ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த காரையும் கைப்பற்றினர். அந்த காரில் பா.ஜனதா கொடிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிமெண்டு லாரியில்...

நேற்று முன்தினம் இரவு கோலாரில் சிமெண்டு லாரியில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் சாக்கு பையில் ரூ.70 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அதற்கு ஆவணங்கள் எதுவும் ஓட்டுனர் தராததால், அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகாவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.17 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பா.ஜனதா வேட்பாளர் வீட்டில்...

பாகல்கோட்டை மாவட்டம் இலகல் என்ற பகுதியில் வந்த ஒரு காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஆவணங்கள் இன்றி ரூ.20 லட்சம் ரொக்கம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கங்காவதியில் பா.ஜனதா வேட்பாளர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அங்கு ஆவணங்கள் இல்லாத ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். ஆகமொத்தம் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக கர்நாடகத்தில் கடைசி நாளான நேற்று தேர்தல் அதிகாரிகள் சுமார் ரூ.3¼ கோடியை பறிமுதல் செய்தனர்.

Next Story