மாவட்ட செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. வளாக ஏரியில் மூழ்கி பலியான மற்றொரு மாணவரின் உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர் + "||" + Chennai IIT Another student's body rescue was drowning in the lake

சென்னை ஐ.ஐ.டி. வளாக ஏரியில் மூழ்கி பலியான மற்றொரு மாணவரின் உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்

சென்னை ஐ.ஐ.டி. வளாக ஏரியில் மூழ்கி பலியான மற்றொரு மாணவரின் உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்
சென்னை ஐ.ஐ.டி. வளாக ஏரியில் மூழ்கி பலியான மற்றொரு மாணவரின் உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
அடையாறு,

சென்னை தரமணி கானகம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் மூர்த்தி (வயது 17), பாலிடெக்னிக் மாணவர் ஜெரால்டு (17) உள்பட 7 பேர் நேற்று முன்தினம் மாலை சென்னை அடையாறு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்தனர்.

அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற மூர்த்தி மற்றும் ஜெரால்டு இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மற்றும் கிண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய 2 பேரின் உடல்களையும் தேடினர். இரவு 8.30 மணியளவில் ஜெரால்டு உடல் மட்டும் மீட்கப்பட்டது.

மற்றொரு மாணவர் உடல் மீட்பு

இதையடுத்து கிண்டி மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் இணைந்து படகு மூலம் சென்று மூர்த்தி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 அடி ஆழம் கொண்ட அந்த ஏரியின் அடிப்பகுதியில் சேறும், சகதியும் மண்டி உள்ளதாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனால் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படை உதவியை நாடினர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு ஐ.ஐ.டி. வளாகத்துக்கு 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவினர் வந்தனர். அவர்கள் ஏரியில் மூழ்கி பலியான மூர்த்தியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் காலை 6.30 மணியளவில் மாணவர் மூர்த்தியின் உடலை மீட்டனர். கோட்டூர்புரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேரை மட்டும் காப்பாற்றினார்

இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார், பலியான 2 மாணவர்களுடன் குளித்த அவருடைய நண்பர்களான விஜய்(18), சதீஸ்(17), வினோத்(18) மற்றொரு சதீஸ்(18) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் நண்பர்கள் அனைவரும் அடிக்கடி இந்த ஏரிக்கு வந்து ஒன்றாக குளித்து உள்ளனர். நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் நண்பர்கள் அனைவரும் ஏரியில் குளித்தனர். அப்போது நீச்சல் தெரியாத ஜெரால்டு, மூர்த்தி, சதீஸ், வினோத் ஆகிய 4 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் தத்தளித்தனர்.

இதை பார்த்ததும் நீச்சல் தெரிந்த விஜய் முதலில் சதீஸ், வினோத் இருவரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் ஜெரால்டு மற்றும் மூர்த்தியை மீட்க செல்வதற்குள் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.