தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்; நர்சு உடல் நசுங்கி சாவு


தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்; நர்சு உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 12 May 2018 10:51 AM IST (Updated: 12 May 2018 10:51 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நர்சு உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் கணவர்-மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி ஜான்சி சத்யா (வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஜான்சி சத்யா தனது குழந்தையுடன் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் டி.களத்தூருக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் பெங்களூருவுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டார். காரை அருண்குமார் ஓட்டினார். இந்த கார் நேற்று அதிகாலை தர்மபுரியை அடுத்த குண்டல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஜான்சி சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் ஜான்சி சத்யாவின் கணவர் அருண்குமார், மாமியார் லீலாவதி, மகள் ஹன்சிகா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அருண்குமார், ஹன்சிகா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story