மக்கள் தொடர்பு முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 12 May 2018 1:40 PM IST (Updated: 12 May 2018 1:40 PM IST)
t-max-icont-min-icon

வேட்டைக்காரனிருப்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

கீழ்வேளூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனுக்களை அளித்து அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்டுள்ள 31 மனுக்கள் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, உரிய முடிவு விரைவில் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு முன்னேற்றமடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

முன்னதாக தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். இதில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், தாசில்தார் தையல்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story