அரூர் ஒன்றியத்தில் குடிநீரை வீணாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை


அரூர் ஒன்றியத்தில் குடிநீரை வீணாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 May 2018 8:14 AM GMT (Updated: 12 May 2018 8:14 AM GMT)

அரூர் ஒன்றியத்தில் குடிநீரை வீணாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் எச்சரித்தார்.

அரூர்,

அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குதல், குடிநீர் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், திட்ட இயக்குனர் காளிதாசன் கலந்து கொண்டு பேசினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், உதயகுமாரி, ஒன்றிய பொறியாளர்கள் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஊராட்சி செயலர்கள், குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திட்ட இயக்குனர் பேசியதாவது.

கோடை காலங்களில் போதிய மழை அளவு இல்லாததால் அரூர் ஒன்றியத்தில் அனைத்து பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் குடிநீரை சிக்கனமாகவும், அனைத்து குடியிருப்புகளுக்கும் சென்று சேரும் வகையில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். கிராம பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகளை சிலர் ஏற்படுத்தி உள்ளனர்.

குடிநீரை வேறு பணிகளுக்காக பயன்படுத்துதல், குடிநீர் சேதப்படுத்துதல், குடிநீரை வீணாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரைதள தொட்டிகளை அமைத்து குடிநீரை முறைகேடாக சேமித்தல், மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதற்கு மாற்றாக ஒரே இடத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். துணி துவைத்தல் உள்ளிட்ட வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. குடிநீர் பிரச்சினைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அனைத்து கிராமங்களிலும் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைப்பு செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story