தொடர்மழை எதிரொலி : மேகமலை அருவிக்கு நீர்வரத்து


தொடர்மழை எதிரொலி : மேகமலை அருவிக்கு நீர்வரத்து
x
தினத்தந்தி 12 May 2018 8:39 AM GMT (Updated: 12 May 2018 8:39 AM GMT)

தொடர்மழை எதிரொலியாக மேகமலை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி உள்ளது. மேகமலை வனப்பகுதியில் மழை பெய்தால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர். ஆனால் போதிய மழை பெய்யாததால், கடந்த 2 மாதங்களாக அருவியில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.

அருவியின் மேல்பகுதியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் வரத்து இருந்தது. இந்த தண்ணீர் கோம்பைத்தொழு, குமணன்தொழு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும் அருவியின் மேல் பகுதிக்கு சென்று, சுற்றுலா பயணிகள் சிலர் குளித்து வந்தனர். இதனால் குடிநீர் மாசடையும் நிலை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மேகமலை வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேகமலை அருவிக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கான தடையை வனத்துறையினர் நீக்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து செல்கிறார்கள்.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருவி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வருகிற சுற்றுலா பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அருவிக்கு சுற்றுலா பயணிகள் கொண்டு வருகிற பிளாஸ்டிக், சோப்பு, ஷாம்பு, மதுபாட்டில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும் என வனச்சரகர் குமரேசன் தெரிவித்துள்ளார். இதேபோல அருவியின் மேல்பகுதிக்கு சென்று குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story