திருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்


திருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்
x
தினத்தந்தி 12 May 2018 2:19 PM IST (Updated: 12 May 2018 2:19 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டருடன், வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பகுதியில் சமீப காலங்களாக வயல்வெளிக்கு வரும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை சிலர் வேட்டையாடுவதும், சிலர் தாக்குவதும் வாடிக்கையாகி விட்டது. இது பற்றி புகார் தெரிவித்தும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.

இந்த நிலையில் கழுமரம் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மயில் ஒன்று வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற ஏழுமலை(வயது 25), கோவிந்தராஜ்(24) மற்றும் சில வாலிபர்கள் மயிலை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர், உடனடியாக மயிலுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. மாறாக அந்த வாலிபர்களிடம் இந்த மயில் உங்களிடம் எப்படி கிடைத்தது?, இதை ஏன் இங்கு கொண்டு வந்தீர்கள்? என்றும் இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து இங்கு இல்லை, தனியார் மருந்து கடையில் சென்று வாங்கி வருமாறும், வனத்துறை அதிகாரியிடம் சென்று கடிதம் வாங்கி வருமாறும் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர்கள், மயிலுக்கு சிகிச்சை அளிக்காமல் எங்களை அலைக்கழிப்பது ஏன்?, மயிலை மீட்டு இங்கு கொண்டு வந்தது தவறா? என்று டாக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த டாக்டர், மயிலுக்கு சிகிச்சை அளித்தார்.

பின்னர் அந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story