16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 12 May 2018 2:28 PM IST (Updated: 12 May 2018 2:28 PM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் பகுதியைச்சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையினர் மற்றும் பரமத்திவேலூர் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் 9-வது வார்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சின்னமணலியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 20-ந் தேதி எடப்பாடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

இந்த நிலையில், 16 வயதே நிரம்பிய சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற உள்ளது குறித்து சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமக்கல் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சுகிலதா, பரமத்தி ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் சுசிலா ஆகியோர் பரமத்தி வேலூர் போலீசார் உதவியுடன் அந்த 16 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் 16 வயதே நிரம்பிய அந்த சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அந்த பெண்ணின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கினர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story