நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு


நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 12 May 2018 2:33 PM IST (Updated: 12 May 2018 2:33 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரவுடியை வழிமறித்து மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாமக்கல்,

நாமக்கல், மாரிகங்கானி தெருவை சேர்ந்தவர் காசி என்கிற காசிராஜன் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நாமக்கல்லில் பழக்கடை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டாம்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் என்கிற சுப்பிரமணியை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் கொலை வழக்குகளும், 2018-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு என பல்வேறு குற்றவழக்குகள் காசிராஜன் மீது நிலுவையில் உள்ளன. இவரது மனைவி தேவி. நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்த காசிராஜன், நாமக்கல்- திருச்சி ரோட்டில் உள்ள எஸ்.கே.நகரில் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.

காசிராஜன், நேற்று இரவு அவரது மனைவி தேவியை ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது எஸ்.கே.நகர் அருகே ஆம்னி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காசிராஜனை வழிமறித்து தாக்க முற்பட்டது. இதையடுத்து காசிராஜனின் மனைவி அந்த கும்பலை தடுக்க முயன்றார்.

ஆனால் அந்த கும்பல் தேவியை கீழே தள்ளிவிட்டு காசிராஜனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் காசிராஜனின் இடது கை, பின் கழுத்து, நெற்றி என உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் அங்கு திரண்டதை கண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆவணங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆம்னி வேனில் அங்கிருந்து தப்பிச்சென்றது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காசிராஜனை மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசிராஜனை வெட்டியது யார்? எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார்கள்? என்பது தெரியவில்லை. மேலும் வெட்டப்பட்ட காசிராஜன் மீது கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story