நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு


நாகர்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில்,

பள்ளி வாகனங்களுக்கான தகுதி சான்று சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி ஆண்டுதோறும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கோடை விடுமுறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நாகர்கோவில், கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் பள்ளி வாகனங்களுக்கான பதிவு சான்று சரிபார்த்தல், வாகன தகுதி குறித்த ஆய்வு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

ஆய்வுக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, துணை கலெக்டர் சாய்வர்தினி ஆகியோர்  தலைமை தாங்கினர். நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் முன்னிலை வகித்து ஆய்வினை தொடங்கி வைத்தார். இதில் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளை சேர்ந்த 183 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வில், வாகனத்தில் அவசர கால வழி, உட்புற கட்டமைப்பு, எச்சரிக்கை விளக்குகள் சரியில்லாத 6 வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக, பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குறைந்தது 5 வருட அனுபவம் உள்ள டிரைவர்கள் மட்டுமே பள்ளி வாகனங்களை ஓட்டவேண்டும். நடத்துனர் உரிமம் பெற்றவர்களை தான் பள்ளி வாகனங்களில் நடத்துனர்களாக பணியமர்த்த வேண்டும். வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசரகால வழி, தீயணைப்பு கருவி, உட்புற பகுதிகள், கதவுகள் போன்றவை சரியாக உள்ளதா? என வாரந்தோறும் பரிசோதனை செய்து பராமரிப்பு புத்தகத்தில் குறிக்க வேண்டும். அவற்றை அந்தந்த பள்ளி நிர்வாகிகள் ஆய்வு செய்யவேண்டும்.

ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை பள்ளி வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து ஆய்வு செய்துகொள்ளவேண்டும். பள்ளி வாகன கட்டமைப்புகளுக்கு என வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகனங்களை கட்டமைப்பு செய்து கொள்ளவேண்டும். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதிலும், மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதிலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்குத்தான் முழுப்பொறுப்பு உள்ளது. எனவே, மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.

தகுதி சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் குறைகளை சரிசெய்ய 1 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே குறைகளை சரிசெய்த பின்னர், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து காண்பிக்கவேண்டும். இல்லை எனில் தாமத செயல்பாடுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வில், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பெலிக்ஸ் மாசிலாமணி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story