மாடு திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்


மாடு திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முருகேசனுக்கு சொந்தமான மாட்டை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரை அதே பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுபற்றி உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாடு திருடிய வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாச்சாபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்திரகுமார் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்தனர். மாடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story