இருளில் மூழ்கி கிடக்கும் சிவகாசி பஸ் நிலையம்


இருளில் மூழ்கி கிடக்கும் சிவகாசி பஸ் நிலையம்
x
தினத்தந்தி 12 May 2018 10:15 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் சரிவர எரியாமல் இருப்பதால் பஸ் நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது.

சிவகாசி,

சிவகாசி சுற்றுப்பகுதியில்200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது முக்கிய தேவைக்கு சிவகாசிக்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. அப்போது இருந்த பஸ்களுக்கு ஏற்ப பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது 230-க்கும் அதிகமான பஸ்கள் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கிறது. சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய ஊர்களுக்கும் பெங்களூருவுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பஸ் நிலையம் வந்து செல்கிறார்கள்.

இந்த பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம், இலவச கழிப்பிடம் ஆகியவை இருக்கிறது. கட்டண கழிப்பிடத்தை தனியார் பராமரித்து வருவதால் ஓரளவு சுகாதாரமான முறையில் இருக்கிறது. அதேநேரத்தில் இலவச கழிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. தேவையான தண்ணீர் வசதி இல்லை. நகராட்சி சுகாதார அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்வதே கிடையாது. இந்த பஸ் நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் மாதந்தோறும் நகராட்சிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கும் போதிய அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சு பணிகளுக்காக வரும் வியாபாரிகளுக்கு தேவையான எந்த வசதியும் இந்த பஸ் நிலையத்தில் இல்லை. பஸ் நிலையத்தில் முக்கியமாக இருக்க வேண்டிய பொருட்கள் பாதுகாப்பு அறை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

அதே போல் பஸ் நிலையத்தின் மையப் பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. இந்த விளக்கு சரிவர எரி வதில்லை. இதனால் பஸ் நிலையத்துக்குள் இருள் சூழ்ந்து இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் பஸ் நிலையத்துக்குள் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை செய்கிறார்கள். பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மின் விளக்குகள் அடிக்கடி எரிவது இல்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story