கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1,300 கோடியில் புதிய திட்டம், கலெக்டர் லதா தகவல்


கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1,300 கோடியில் புதிய திட்டம், கலெக்டர் லதா தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 3:30 AM IST (Updated: 13 May 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்க ரூ.1,300 கோடியில் புதிய திட்டம் தயாரித்து அரசின் அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 723 குக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க அரசின் உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி இந்த கிராமங்களில் உள்ளவர்கள் 800 குழுக்களாக பிரிக்கப்பட்டுஉள்ளனர். இதில் ஒரு குழுவிற்கு ஒரு வேலை என்ற அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 534 குழுக்களுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ரூ.1,300 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது. இது தவிர காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-வது கட்டமாக மேலும் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் அரசின் அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குடிநீருக்காக ஆழ்குழாய் அமைக்கும்போது நல்ல தண்ணீர் கிடைக்கிறதா என்று உறுதி செய்த பின்னர் தான் ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தற்போது வாட்ஸ்-அப் மற்றும் முகநூல்களில் பல்வேறு வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன. எனவே சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும்போது அவை உண்மையானது தானா என்பதை உறுதி செய்த பின்னர் தான் பகிர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story