தஞ்சை மாவட்டத்தில் 38 பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று ரத்து அதிகாரிகள் நடவடிக்கை


தஞ்சை மாவட்டத்தில் 38 பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று ரத்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 38 வாகனங்களுக்கு தரச்சான்று ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் வட்ட அளவில் குழுக்களை அமைத்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுரைப்படி பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்திடவும், டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை மேம்படுத்திடவும் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று தஞ்சை கல்வி மாவட்டத்தில் உள்ள 53 பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 330 வாகனங்களில் 248 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தன. மீதமுள்ள 82 வாகனங்கள் வரவில்லை. இந்த ஆய்வு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடந்தது.

ஆய்வின்போது வாகனங்களுக்கு பதிவுசான்று, அனுமதிசீட்டு முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாகனமாக ஏறி சென்று படிக்கட்டு நன்றாக இருக்கிறதா? சீட்டுகள், அவசரகால வழி, தீ தடுப்பு சாதனங்கள், முதலுதவி பெட்டிகள் முறையாக இருக்கிறதா? என்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில் முறையாக பராமரிக்கப்படாத 20 பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணத்தில் மொத்தம் 136 பள்ளிகளை சேர்ந்த 785 வாகனங்கள் ஆய்வுக்கு வரும்படி அந்தந்த பள்ளிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் 227 வாகனங்கள் ஆய்வுக்கு வரவில்லை. மீதமுள்ள வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் முறையாக பராமரிக்கப்படாத 38 வாகனங்களுக்கு தரச்சான்று ரத்து செய்யப்படடுள்ளது. அவர்கள் குறைகளை எல்லாம் சரி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் மீண்டும் ஆய்வுக்கு வாகனங்களை கொண்டு வந்தால் அனுமதி வழங்கப்படும்.

ஆய்வுக்கு வராத வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படும். டிரைவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்பதற்காக வேகக்கட்டுப்பாட்டு கருவி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி டிரைவர்கள் வேகமாக செல்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வாசிக்க, டிரைவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, வட்டார போக்குவரத்து அலுவலர் காத்திகேயன், ஆய்வாளர் சுந்தரராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story