கோவில்பட்டி அருகே பரிதாபம் கார்-மொபட் மோதல்; 1½ வயது குழந்தை பலி


கோவில்பட்டி அருகே பரிதாபம் கார்-மொபட் மோதல்; 1½ வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 13 May 2018 2:00 AM IST (Updated: 13 May 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 29) ராணுவ வீரர். இவருடைய மனைவி கலா. இவர்களுடைய மகன் ராஜேஷ் (1½). ராமச்சந்திரனின்

கோவில்பட்டி, மே.13-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 29) ராணுவ வீரர். இவருடைய மனைவி கலா. இவர்களுடைய மகன் ராஜேஷ் (1½). ராமச்சந்திரனின் மாமனார் தங்கவேல் (70), அதே பகுதியில் வசித்து வருகிறார். 

இவருடைய உறவினர் ஒருவர் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தங்கவேல் தன்னுடைய உறவினரை ஆஸ்பத்திரியில் சென்று பார்ப்பதற்காக மொபட்டில் புறப்பட்டார். அப்போது தங்கவேல் தன்னுடைய மூத்த மகள் மகேசுவரியையும் (40), இளைய மகள் கலாவின் மகன் ராஜேசையும் மொபட்டில் அழைத்து சென்றார்.

கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் சர்வீஸ் ரோட்டில் வலதுபுறம் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, தங்கவேல் மொபட்டில் நாற்கர சாலையை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல், மகேசுவரி, குழந்தை ராஜேஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

உடனே அவர்கள் 3 பேருக்கும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் குழந்தை ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தது. தங்கவேல், மகேசுவரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தை (40) கைது செய்தார்.

Next Story