மாவட்ட செய்திகள்

தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்: விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை + "||" + Nutrients that are baked without water

தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்: விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை

தண்ணீரின்றி கருகி வரும் நெற்பயிர்கள்: விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை
கோடைமழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம்,

கோடை மழை, நிலத்தடி நீர், மும்முனை மின்சாரம் ஆகியவற்றை நம்பி விருத்தாசலம், கம்மாபுரம், ஊ.மங்கலம், மங்கலம்பேட்டை, ஆலடி பகுதி விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய முடிவு செய்தனர். அதன்படி கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெல் நடவு செய்தனர்.


இந்த பகுதியில் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நடவு செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நடவு செய்தபோது நெற்பயிர்களுக்கு தேவையான நீர் கிடைத்தது. இதனால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. இதனை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும் என்று நினைத்தனர். அதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என கருதினர். ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தபோதிலும் விருத்தாசலம் பகுதியில் ஒரு துளி கூட பெய்யவில்லை.

தினமும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகளின் கண்களில் மழைத்துளி போல் கண்ணீர்தான் வெளிவருகிறது. நெல் நடவு செய்து ஒரு மாதம் ஆகின்ற நிலையில் நெற்பயிர்கள் பூ பூக்கும் தருவாயில் உள்ளது. ஆனால் நெற்பயிருக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.

கோடை மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது.

நிலத்தடியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் கிடைப்பதால், அதனை நெற்பயிர்களுக்கு முழுமையாக பாய்ச்ச முடியவில்லை. அதுமட்டுமின்றி அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. போதிய மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். மணவாளநல்லூர், பரவளூர், கோமங்கலம், ஆலிச்சிக்குடி, சாத்துக்கூடல், கோ.ஆதனூர், ஆலடி, மணக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் போதிய தண்ணீர் கிடைக்காமல் நெற்பயிர்கள் கருகி உள்ளன. பல இடங்களில் நெற்பயிர்கள் கருகி வருகிறது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து நெற்பயிர்களும் கருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னோடி விவசாயி சாத்துக்கூடல் சக்திவேல் கூறுகையில், மழை பெய்ய தொடங்கினால் வெள்ளம் ஏற்பட்டு அனைத்து பயிர்களையும் சேதமாக்கிவிட்டு போய்விடுகிறது. அல்லது பயிர்களுக்கு தண்ணீரை கொடுக்காமல் மழை பொய்த்து போகிறது. ஆழ்துளை மோட்டாரை நம்பி பயிர்செய்தால் மும்முனை மின்சாரம் வழங்காமல் மின்சார வாரியம் எங்களை பழிவாங்கிவிடுகிறது.

இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்தால் இதுபோன்ற வறட்சி காலக்கட்டங்களில் பயன்படும். ஆனால் அதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.