ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை எதிரொலி: படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்


ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை எதிரொலி: படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 13 May 2018 4:00 AM IST (Updated: 13 May 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை எதிரொலியால் படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பரங்கிப்பேட்டை,

கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன்குஞ்சுகள் அழியும் நிலை ஏற்பட்டது.

எனவே கடந்த 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 30-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தை தமிழக அரசு 61 நாட்களாக உயர்த்தி அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகளை மீனவர்கள் ஆழ்கடலுக்கு எடுத்துச்சென்று மீன்பிடிக்க கூடாது. ஆனால் சிறிய படகுகளில் கடற்கரையோரத்திலும், 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும் மீன்பிடிக்கலாம்.

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில், முடசல் ஓடை பகுதி மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்திலும், கடலோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள பழுதினை வெல்டிங் செய்து சரிசெய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி புதிய வலை பின்னும் பணியும் நடைபெறுகிறது. பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒருவார காலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள்.

அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். இதனால் நாகையில் ஐஸ் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறும். ஆனால் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் தற்போது ஐஸ் கட்டி தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மீன்பிடித்து வரும் படகுகளில் இருந்து மீன்களை இறக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழில், டீசல் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வரும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் தற்போது வேலையின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி, தேவனாம்பட்டினம், ராசாப்பேடடை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளதால் வேலைக்கு செல்லவில்லை. அரசு கொடுக்கும் நிவாரண தொகையும் போதியதாக இல்லை. அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் பழுதடைந்த படகுகளை சீரமைத்து வருகிறோம். ஒரு படகை சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.1½ லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு வலையை 8 பேர் சேர்ந்து பின்னினால் ஒரு நாளில் முடித்து விடலாம் என்றார்கள்.

Next Story