காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அணை கட்டப்படவில்லை அய்யாக்கண்ணு பேச்சு


காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அணை கட்டப்படவில்லை அய்யாக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 8:20 PM GMT)

காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த ஒரு அணையும் கட்டப்படவில்லை என்று அய்யாக்கண்ணு கூறினார்.

லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியில் காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியா அமைப்பின் சார்பாக விவசாய மாநாடு ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். தேசிய பொது செயலாளர் ஜான்குமார் வரவேற்று பேசினார்.

இதில் காமராஜ் காலத்து விவசாயமும், இன்றைய நிலையும் என்ற தலைப்பில் தலைவர் நீல லோகிதாசன், முன்னாள் எம்.எல்.ஏ. முகம்மது இஸ்மாயில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் மன்னார்குடி ரெங்கநாதன், காவிரி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் புலியூர் நாகராஜன், அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கம் வீரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் அய்யாக்கண்ணு பேசுகையில், ‘காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டது. புள்ளம்பாடி வாய்க்கால் காமராஜர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் தான் புள்ளம்பாடி பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த ஒரு அணையும் கட்டப்படவில்லை’ என்று கூறினார்.

மாநாட்டில், மாநில அரசு கரும்புக்கு அறிவித்த பரிந்துரை விலையை கொடுக்க வேண்டும். தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலையை கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊட்டி கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் வீணாக கேரளா பகுதிக்கு சென்று கடலில் கலக்கிறது. இவ்வாறு கலக்கும் தண்ணீர் 200 டி.எம்.சி.க்கு மேல் இருக்கும். எனவே ஊட்டியில் அணை கட்டி வீணாக கேரளாவில் கடலில் கலக்கும் 200 டி.எம்.சி. தண்ணீரை பவானி, காவிரியில் திருப்பிவிடுவதன் மூலம் காவிரி டெல்டா பகுதியில் முழுமையாக விவசாயம் செய்ய முடியும். தேவையில்லாமல் கர்நாடக அரசிடம் 174 டி.எம்.சி. தண்ணீருக்காக நாம் போராட தேவையி்ல்லை என்று விவசாயிகள் வாதிட்டனர். மாநாட்டில் விவசாய சங்கத்தினர், காமராஜ் பவுண்டேசன் விவசாய அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story