பஸ் மோதி மின் கம்பம் உடைந்தது மின்சாரம் இல்லாததால் பயணிகள் உயிர் தப்பினர்


பஸ் மோதி மின் கம்பம் உடைந்தது மின்சாரம் இல்லாததால் பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 May 2018 4:30 AM IST (Updated: 13 May 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே பஸ் மோதி மின் கம்பம் உடைந்தது. மின்சாரம் இல்லாததால் பயணிகள் உயிர் தப்பினர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரியில் இருந்து நேற்று அரசு பஸ் ஒன்று பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி மலைக்கிராமம் பெரியூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 70 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியில் மணல்பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது பஸ் மோதியது. இதில் மின் கம்பம் உடைந்து பஸ்சின் மேற்கூரை மீது விழுந்தது. மேலும் மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். மின்சாரம் இல்லாததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் கம்பிகளை சீரமைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைக்கிராமத்திற்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும். மேலும் மலைப்பாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மின் கம்பத்தில் பஸ் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story