தொடர்மழை எதிரொலி: வைகை அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு
தொடர்மழை எதிரொலியால் வைகை அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
ஆண்டிப்பட்டி,
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலை பார்த்து அச்சத்தில் இருந்த மக்களுக்கு, கொட்டித்தீர்க்கும் கோடை மழை ஆறுதல் அளித்துள்ளது. தொடர் மழை எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.அதன்படி ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், கடந்த 3 நாட்களுக்கு முன்பு 34.35 அடியாக இருந்தது. தற்போது 36.32 அடியாக உயர்ந்துள்ளது. மூல வைகையாறு, முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 302 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 48 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில், நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story