வாக்குப்பதிவு எந்திர கோளாறால், தேவேகவுடா ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்போட்டார்
ஹாசன் மாவட்டம் படுவலஹிப்பே வாக்குச்சாவடியில் தேவேகவுடா ஓட்டுப்போட வந்தபோது திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
பெங்களூரு,
ஹாசன் மாவட்டம் படுவலஹிப்பே வாக்குச்சாவடியில் தேவேகவுடா ஓட்டுப்போட வந்தபோது திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுமார் 1 மணி நேரம் தாமதமாக தேவேகவுடா ஓட்டுப்போட்டார்.
தேவேகவுடா
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி காலை 7 மணிக்கு மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் எந்திர கோளாறு மற்றும் சில பிரச்சினைகளால் ஓட்டுப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது.
அதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவும் ஓட்டுப்போட வந்தபோது வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் தாமதமாக வாக்களிக்க நேரிட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
வாக்கை பதிவு செய்தார்
தேவேகவுடா தனது மனைவி சென்னம்மாவுடன் ஹாசன் மாவட்டம் படுவலஹிப்பே கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட சென்றார். அப்போது அங்கு திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தேவேகவுடா, தனது மனைவி சென்னம்மாவுடன் அங்கு காத்திருந்தார். பின்னர் அவர் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் அவர் சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்தார். அதற்குள் வாக்குச்சாவடியில் இருந்த தொழில்நுட்ப ஊழியர்கள், வாக்குப்பதிவு எந்திரத்தை சரிசெய்திருந்தனர். இதையடுத்து தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்குள் சென்ற தேவேகவுடா, தனது வாக்கை பதிவு செய்தார். அவருக்கு பின், அவருடைய மனைவி சென்னம்மாவும் தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story