முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர்


முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவிகள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர்
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 9:33 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் முதல் முறையாக வாக்காளர்களான கல்லூரி மாணவிகள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். அவர்கள், ‘நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூருவில் முதல் முறையாக வாக்காளர்களான கல்லூரி மாணவிகள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். அவர்கள், ‘நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

வெளிப்படுத்த மாட்டேன்

கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மாநில மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். குறிப்பாக பெங்களூருவில் இளம் வாக்காளர்கள் அதாவது முதல் முறை இளம் வாக்காளர்கள் உற்சாகமாக வந்து ஓட்டுப்போட்டனர். பெங்களூரு ஜோகுபாளையாவில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் திவ்யா, பிரியங்கா கோமல்ஸ்ரீ, ரம்யா ஆகியோர் முதல் முறையாக வந்து வாக்களித்தனர்.

அவர்களில் கல்லூரி மாணவி திவ்யா கூறுகையில், “நான் முதல் முறையாக வாக்களித்து இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பகுதிக்கு நல்லது செய்பவர்களுக்கு எனது ஓட்டை பதிவு செய்துள்ளேன். யாருக்கு ஓட்டுப்போட்டேன் என்பது ரகசியமானது. இதை நான் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் நல்லவர்களுக்கு வாக்களித்து உள்ளேன். மக்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு அதை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கு தான் எனது ஆதரவு“ என்றார்.

நல்லாட்சி நிர்வாகத்தை...

இன்னொரு மாணவி பிரியங்கா கூறும்போது, “நான் முதல் முறையாக வாக்களித்து உள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. நல்லவர்கள், ஊழல் செய்யாதவர்கள், மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் நான் ரொம்பவே யோசித்து எனது வாக்கை பதிவு செய்துள்ளேன். வெற்றி பெறுபவர்கள் நல்லாட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும். எங்கள் தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை, கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய கல்லூரி மாணவி கோமல்ஸ்ரீ, “நான் முதல்-முதல் முறையாக ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். எனது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியதே எனக்கு திருப்தியாக உள்ளது. வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் மக்களின் மேம்பாட்டிற்கு பாடுபட வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எங்கள் தொகுதியையும், கர்நாடகத்தையும் முன்னேற்ற பாடுபட வேண்டும். அத்தகையவர்கள் வெற்றி பெற வேண்டும்“ என்றார்.

ஜனநாயக கடமையை...

அதன் பிறகு பொறியியல் கல்லூரி மாணவி ரம்யா கூறுகையில், “முதல் முறையாக நான் ஓட்டுப்போட்டு இருக்கிறேன். ஓட்டுப்போட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் நான் தவறாமல் வந்து எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும். சேவை மனப்பான்மை உள்ளவர்கள் வெற்றி பெற்றால், மக்களுக்கு நல்லது செய்வார்கள். எக்காரணம் கொண்டும் ஊழலை அனுமதிக்கக்கூடாது. ஊழல் செய்பவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டால் அதனால் மக்களுக்கு எந்த சேவையும் கிடைக்காது. இதை மனதில் நிறுத்தி நான் ஓட்டுப்போட்டுள்ளேன்” என்றார்.

Next Story