பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்னர் இந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திரன் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
அதன் பிறகு அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று காலை அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த 100-க்கும் மே ற்பட்ட கிராம மக்கள் பள்ளிப்பட்டு- சோளிங்கர் சாலையில் அத்திமாஞ்சேரிப்பேட்டை அரிசி ஆலை எதிரே காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. .தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராம மக்கள் தங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன் வராத வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story