கர்நாடக சட்டசபை தேர்தல்: கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு


கர்நாடக சட்டசபை தேர்தல்: கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 13 May 2018 3:45 AM IST (Updated: 13 May 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.

கோலார் தங்கவயல்,

கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு நிறுத்தம்

கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடந்தது. மாநிலம் முழுவதும் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். அதன்படி நேற்று கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார், கோலார் தங்கவயல், முல்பாகல், சீனிவாசப்பூர், மாலூர், பங்காருபேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் உள்ள நம்பெருமான் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட காலையிலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

72 சதவீதம் வாக்குகள் பதிவு

இதனால் ஆத்திரம் அடைந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து கோலாரில் இருந்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு அதன்பின்னர் வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அங்கு 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது.

இதேப்போல கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை, சீனிவாசப்பூர் உள்பட 15 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. கோலார் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 71.26 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதில் அதிகபட்சமாக கோலார் தங்கவயலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மோதல்

இந்த நிலையில் சீனிவாசப்பூர் டவுனில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தின் முன்பு வைத்து ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதேப்போல மாலூர் அருகே உள்ள குப்பூர் கிராமத்திலும் ஜனதாதளம்(எஸ்) காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு சென்ற போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இதுதவிர கோலார் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. கோலார் மாவட்ட கலெக்டர் சத்தியவதி கோலார் அருகே ஆரோஹள்ளி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்திலும், தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார் உரிகம் ஐந்து விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்திலும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகள், மிகபதற்றமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

இதேப்போல சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்பள்ளாப்பூர் உள்பட 5 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதலே ஓட்டுபோட வாக்காளர்கள் வந்தனர்.

நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் எந்த அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

Next Story