வேடசந்தூர் அருகே வாரச்சந்தை: ஆடுகள் வாங்க குவிந்த வியாபாரிகள்


வேடசந்தூர் அருகே வாரச்சந்தை: ஆடுகள் வாங்க குவிந்த வியாபாரிகள்
x
தினத்தந்தி 12 May 2018 10:00 PM GMT (Updated: 12 May 2018 9:51 PM GMT)

வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு வேடசந்தூர், எரியோடு, சின்னராவுத்தன்பட்டி, காளனம்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கறிக்கடைக்காரர்கள் கல்வார்பட்டி ஆடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் வருகிற வைகாசி மாதம் கிராம பகுதிகளில் அதிகளவு கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும்.

இதையொட்டி நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வாங்குவதற்காக வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. ஆட்டோ, சரக்கு வேன்களில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் ஆடுகளின் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 12 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

அதேபோல் கடந்த வாரம் 15 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.3 ஆயிரத்து 750-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.4 ஆயிரத்துக்கு 500-க்கு விற்பனை ஆனது. கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாரச்சந்தையின் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சுற்றுச்சுவர் உடைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி கழிப்பறை, குடிநீர் வசதி முற்றிலும் இல்லாத நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கல்வார்பட்டி வாரச்சந்தைக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story